No results found

    நல்ல வாசனை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்


    ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர்.

    முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    பிறகு ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்.

    அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் முதலிய வாசம் கொண்ட இயற்கையான எண்ணெயை தொடர்ந்து நுகர வைத்தனர். ஒரு கருவியை கொண்டு காற்றில் செலுத்தப்படும் இந்த வாசத்தை தினமும் இரவில் 2 மணி நேரம், வீட்டில் பல இடங்களிலிருந்தும் அவர்கள் முகரும்படி செய்யப்பட்டது.

    இதே போன்று தினமும் 2 மணி நேரம், மற்றொரு குழுவினரிடம் தரமான வாசமில்லாத ஒரு பொருள் முகர செய்யப்பட்டது. 6 மாதங்கள் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.

    6 மாதங்கள் கடந்ததும், அவர்களிடம் மீண்டும் நரம்பியல்-உளவியல் திறன் பரிசோதிக்கப்பட்டது.

    இதில் நல்ல வாசனையை முகர்ந்தவர்களின் முடிவெடுக்கும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். மேலும், அந்த குழுவில் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.

    நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசம் இருக்கும்படியாக வைத்து கொண்டால் நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் வயதானால் தோன்றும் ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال