No results found

    மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்


    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி 160 உயிர்களை பலி வாங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் கோரத்தாண்டவம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளன. குறிப்பாக இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாரணமாக ஊருக்குள் அழைத்து வந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    தொடர்ந்து வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்த அவர்கள் வடகிழக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது.

    ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவில், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி பி ஜோஷி (ஓய்வு), டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என உச்ச நீதிமன்றம் கூறியது.

    நீதிபதிகள் குழு நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், 11 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பான விசாரணையை கண்காணிக்குமாறு மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை தலைவர் தத்தாத்ரே பட்சல்கிகரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    Previous Next

    نموذج الاتصال