No results found

    உலக கோப்பை போட்டி - பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல்


    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

    இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.

    ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال