மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர இது முக்கிய பங்காற்றியது.
இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல், வாரிசு அரசியல், சமாதானம் என்பதுதான் என பிரதமர் மோடி அடிக்கடி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளையனே வெளியேறு தினத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்துள்ளார்.