No results found

    நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு 225 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டினுடைய எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவரால், ஏன் இது வரைக்கும் ஐ.ஐ.டி., என்.எல்.யூ, நிப்ட் போன்ற நாட்டினுடைய முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குப் போக முடியாமல் இருந்தது என்றால், அதற்கென்று தனியாக சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கிறது.

    நம்முடைய குழந்தைங்களுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கிறோம்.

    அதனால் இன்றைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கடுமையான முயற்சிகளால் தான் இது சாத்தியமாச்சு!

    கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை!

    அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர் செல்கிறார்கள்.

    தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக் கழகத்துக்கு கடந்த கல்வியாண்டில் சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    ஜீரோ! ஆனால் இந்த ஆண்டு 6 பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

    முழு ஸ்காலர்ஷிப்புடன் தைவான் ஸ்டேட் யுனிவர் சிட்டியில் படிப்பதற்கு இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.

    இந்தியன் மரிடைம் யுனிவர்சிட்டியில் கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில் இந்த ஆண்டு 6 மாணவர்கள் செல்லயிருக்கிறார்கள்.

    தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு 4 பேர். இந்த ஆண்டு 9 பேர்.

    நேஷனல் ஷேன் டெக்னாலஜியில் இந்த ஆண்டு 27 பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு யாரும் போகவில்லை!

    கடந்த ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு 6 பேர் படிக்கப் போனார்கள் இந்தக் கல்வியாண்டில் 20 பேர் செல்கிறார்கள்.

    ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்கல்-க்குத்தான் இந்த ஆண்டு அதிகம் பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்தான் அங்கே சென்றார். ஆனால் இந்த ஆண்டு 69 பேர் போகப் போகிறார்கள்.

    இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்துக்கு கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில், இந்த ஆண்டு அந்த நிலைமாறி, 10 அரசுப் பள்ளி மாணவர்கள் போகிறார்கள்.

    இப்படி, மொத்தம் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து படிக்கப் போகிறீர்கள் என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது!

    தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, இன்றைக்கு நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். இது மூலமாக அரசுப் பள்ளியுடைய கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்குத் தெரிய வந்தி ருக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நான் நினைப்பது என்ன வென்றால், உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ள நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களான நீங்களும் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமையடைகின்றது.

    2022-23-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில், 25 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் செல்வதற்கு விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தோம்.

    இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 பள்ளிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு 38 மாவட்டங்களிலும், மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இத்தனை மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களில் படிக்க செல்கிறார்கள்.

    மாணவர்களிடம் நான் பேசும்போதெல்லாம் சொல்கிறதுதான், மறு படியும் இங்கேயும் சொல்ல விரும்புறேன். அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிங்க! படிங்க! படிங்க! இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال