கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக தி.மு.க. தலைமை கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணியினரும் எத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும் என்று தலைமை கழகம் வரையறுத்துள்ளது.
அதற்கான பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் தற்போது வெளியிட்டு உள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியினருக்கும் தி.மு.க. தலைமை கழகம் அளித்துள்ள நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
தி.மு.க. இளைஞரணியினர் மாவட்ட வாரியாக பேச்சு போட்டி நடத்தி மாநில அளவில் 100 பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை மாநில சொற்பொழிவாளர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும். யூடியூப்பில் கருணாநிதி வாழ்க்கை சாதனைகளை விளக்கும் காணொலிகளை பதிவிட வேண்டும்.
மாணவர் அணியினர் சார்பில் மீண்டும் மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் பேச்சு போட்டி நடத்த வேண்டும். மகளிர் அணி சார்பில் அகில இந்திய அளவில் பெண் தலைவர்களின் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.
மருத்துவ அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். இலக்கிய அணி சார்பில் கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கமும் நடத்தப்பட வேண்டும்.
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டம் தோறும் காட்சிப்படுத்த வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக கலைஞர் சுடர் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.
சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
வர்த்தகர் அணி சார்பில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் கருணாநிதி சாதனைகளை விளக்கும் கலைஇரவு நடத்த வேண்டும். தொண்டர் அணி சார்பில் சினிமா நடிகர்-நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 இடங்களில் மரம் நட வேண்டும்.
நெசவாளர் அணி சார்பில் கண்காட்சி நடத்த வேண்டும். மீனவர் அணி சார்பில் கடலோர பகுதிகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்தவேண்டும். ஆதிதிராவிடர் பிரிவு சார்பில் சமநீதி கோட்பாடுகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள் மூலம் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அனைத்து ஊர்களிலும் கொடி கம்பம் நிறுவ வேண்டும். மேலும் 234 சட்டசபை தொகுதி வாரியாக 234 இடங்களில் கருணாநிதிக்கு முழு உருவ சிலைகள் வைக்க இடங்களையும், தேதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.