No results found

    ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை


    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தமிழகத்தில் காவல்துறையின் கவனம் சட்டம்-ஒழுங்கு மீது இல்லை. அவர்களின் கவனம் வேறு பக்கம் சிதறி போயிருக்கிறது. தமிழக காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும். பா.ஜனதா கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு அதற்கே நேரம் போதாதபோது, பெட்ரோல் குண்டு வீசுபவர்களையும், வழிப்பறி செய்பவர்களையும் பிடிக்க எப்படி நேரம் இருக்கும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டது, ஆச்சரியம் அளிப்பதுடன் தவறானது என்று சென்னை ஐகோர்ட்டு இன்று (நேற்று) தான் தீர்ப்பு கொடுத்துள்ளது. இந்த விசயத்தில் காவல்துறையை பொறுத்தவரை நடுநிலை தவறிவிட்டனர். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை, தி.மு.க. ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    சட்டத்துறையை நாம் கையில் எடுப்பது தவறுதான். பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு போவதை டிரைவரும், கண்டக்டரும், போலீசாரும் கண்டிக்கவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த சகோதரி சமூக அக்கறையுடன் கேட்டுள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் கேட்டது நியாயம். அதனை பார்த்து தான் அவருக்கு நீதிபதி ஜாமீன் கொடுத்துள்ளார்.

    நாகாலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள்தான் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றும் பேசி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்த மக்களை அவமானப்படுத்தியுள்ளார். கடந்த, 30 மாதமாக அவர் தொடர்ச்சியாக இதுபோன்று பேசி வருகிறார். அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    ஆர்.எஸ்.பாரதி மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகாலாந்தில் யாராவது ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் போதும். இந்திய தண்டனை சட்டம் 153அ என்ற சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு அவரை கைது செய்து, நாகாலாந்து அழைத்து சென்றுவிடலாம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال